ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது


ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
x

பேரணாம்பட்டு அருகே மின்கட்டண விகித்தத்தை மாற்றியமைக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

வேலூர்

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 55). இவர் இட்லி மாவு அரைக்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மின் கட்டணம் அதிகமாக வந்தது. இதனையடுத்து அவர் சிறு குறு தொழில் சான்று பெற்று அதன் மூலம் மின்கட்டண விகிதத்தை மாற்றக்கோரி கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆன்லைனில் மேல்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.

பின்னர் மின்வாரிய அலுவலக வணிக பிரிவில் இதுகுறித்து அவர் கேட்ட போது மனு தொலைந்து விட்டதாக கூறி அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த மாதம் 21-ந் தேதி மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். 22-ந் தேதி சிவாவை மேல்பட்டி மின்வாரிய வணிக ஆய்வாளர் பள்ளிகொண்டாவை சேர்ந்த மதன் என்பவர் வரவழைத்து கட்டண விகிதத்தை மாற்றி அமைப்பதற்கு ரூ.5 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சிவா ரூ.3 ஆயிரம் தருவதாக கூறியிருக்கிறார்.

கைது

இதனை ஏற்காத மதன் ரூ.4,500 கேட்டுள்ளார். அதற்கு ரூ.4 ஆயிரம்தான் தரமுடியும் எனக்கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவா இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் நேற்று காலை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்துடன் சிவாவை மேல் பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தனர். அங்கு பணியில் இருந்த வணிக ஆய்வாளர் மதனிடம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார். அதை அவர் பெற்றுக்கொண்ட அவர் இன்னும் ரூ.500 தரும்படி கேட்டுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று மதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். போர்மேனாக பதவி உயர்வு பெற இருந்த நிலையில் லஞ்சம் வாங்கி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story