ஓட்டல் சப்ளையரிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது


ஓட்டல் சப்ளையரிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
x

திருவண்ணாமலையில் தற்காலிக மின் இணைப்பு வழங்க ஓட்டல் சப்ளையரிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தற்காலிக மின் இணைப்பு வழங்க ஓட்டல் சப்ளையரிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஓட்டலில் சப்ளையர்

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகரை சேர்ந்தவர் வரதன் (வயது 47),் சென்னையில் தனியார் ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

வரதன் அவருடைய மனைவி சுதா பெயரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேலதிக்கான் பகுதியில் உள்ள அருணாச்சலம் நகரில் வீட்டுமனை வாங்கி இருந்தார்.

இதையடுத்து வீடு கட்டுவதற்காக தற்காலிகமாக மின்இணைப்பு கேட்டு கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி இ-சேவை மையத்தில் பதிவு செய்தார்.

அதற்கு உண்டான கட்டணத்தொகை ரூ.586-ஐ ஆன்லைனில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி வீடு கட்டும் பணி நடந்த இடத்தில் தற்காலிகமாக மின்சார மீட்டர் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது திருவண்ணாமலை தென்றல் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் போரமேனாக பணியாற்றி வரும் ரேணு என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

அந்த சமயத்தில் வரதன், நானே ஓட்டலில் சப்ளையராக பணிபுரிகிறேன் என்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று கூறி உள்ளார்.

அதற்கு அவர் ஓட்டலில் வேலை செய்கிற நீ எதற்கு வீடு கட்டுகிறாய் என்று திட்டி விட்டு சென்று விட்டார்.

பின்னர் மீண்டும், மீண்டும் வரதனை ரேணு தொடர்பு கொண்டு லஞ்சமாக பணம் கேட்டு வந்துள்ளார்.

கடந்த 19-ந் தேதி வரதனை தொடர்பு கொண்ட அவர் லஞ்சமாக ரூ.5 ஆயிரம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

லஞ்சப்பணம் கொடுக்க விருப்பம் இல்லாமல் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வரதன் புகார் மனு கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுறுத்தலின்படி இன்று மாலை திருவண்ணாமலை தென்றல் நகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்ற வரதன் அங்கு இருந்த போர்மேன் ரேணுவிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

போர்மேன் கைது

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய ரேணுவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் செல்வராஜ், கோபிநாத், முருகன், சரவணன், கமலகண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரேணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story