மழைக்காலத்திற்கான மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்


மழைக்காலத்திற்கான மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்
x

மழைக்காலத்திற்கான மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

கடலூர்

பாதுகாப்பு வழிமுறைகள்

வடகிழக்கு பருவ மழையின் போது, மின் விபத்துகள் ஏற்படாத வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சில பாதுகாப்பு வழிமுறைகளை கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் வெளியிட்டுள்ளார்.

இதன் விவரம் வருமாறு:-

வாட்ஸ்-அப் எண்

அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், உடைந்த மின்கம்பங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சேதமடைந்து வெளியே தெரியும் புதைவட கம்பிகள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை பார்த்த உடன் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு நேரிலோ, தொலைபேசி வழியாகவோ தெரிவிக்க வேண்டும்.

மேலும் கடலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் மின் விபத்தை தடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் சேவை மையத்தை 9445856039 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். அது மட்டுமின்றி 9445855768 என்ற மண்டல வாட்ஸ்-அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்கலாம்

கடலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களுடைய மின் தடை குறித்த புகார்களை மின்னகம் 9498794987 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, மின் தடை குறித்த புகார்களை கணினி மயமாக்கப்பட்ட மின் தடைபுகார் மையத்தில் பதிவு செய்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், தாங்கும் கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.

பொதுமக்கள் வீடு கட்டும் போது, மின் பாதைகளில் இருந்து போதுமான இடைவெளி விட்டு வீடு கட்ட வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகள் போன்றவற்றை இயக்கக்கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம்.

கிரிமினல் குற்றம்

விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர்களை காப்பாற்ற மின் வேலி அமைப்பதன் மூலம் அதை அறியாத அப்பாவி மக்கள் மின் விபத்துக்கு ஆளாகின்றனர். ஆகவே விவசாய நிலத்தில் மின் வேலி அமைக்க வேண்டாம். விவசாய நிலத்தில் மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின் தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்கள் பகுதிக்குட்பட்ட பிரிவு அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story