தமிழகத்தில் மின்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோவையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோவையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அங்கு காலை முதலே மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வர தொடங்கினார்கள். அங்கு கூட்டம் அதிகமானதால் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், எதிர்க் கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசியதாவது:-
பதில் சொல்ல வேண்டும்
தமிழகத்தில் கடந்த 1 ஆண்டாக எந்த வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்பட வில்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4 வருடம் ஆட்சி செய்த போது எந்த வரியையும் உயர்த்த வில்லை. ஆனால் தி.மு.க. அரசு மக்களை பற்றி கவலைப்படாமல் அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டது.
குறிப்பாக மின்கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 53 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. எனது வீட்டில் சோதனை நடத்த வேண் டும் என்பதிலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிக்கோ ளாக இருக்கிறார்.
என் வீட்டில் சோதனை நடந்த போது வந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்களை போலீசார் தரதரவென இழுத்துச்சென்றனர். இதற்கு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை.
ஆட்சி அமைப்போம்
தற்போது தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது. கோவைக்கு தி.மு.க. அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வர வில்லை. நாங்கள் 5 ஆண்டில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்தோம்.
அதிகளவில் மேம்பாலங்களை கொடுத்தோம், சாலைகளை சீரமைத்தோம், 6 புதிய கல்லூரிகளை கொண்டு வந்தோம்.
ஆனால் தற்போது கோவையில் எந்த சாலையும் சரியில்லை. குண்டும் குழியுமாக இருக்கிறது. நாங்கள் டெண்டர் போட்ட 500 சாலைப்பணிகளை ரத்து செய்து உள்ளனர்.
எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்.
அதுபோன்று சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிறுத்தி வைக்க வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறும்போது, மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உடனடியாக மின்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, முன்னாள் எம்.பி. தியாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, தேயிலை தொட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வி.அமீது, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், சூலூர் ஒன்றிய செயலாளர்கள் ஜி.குமரவேல் (தெற்கு), வி.பி.கந்தவேல் (வடக்கு), முன்னாள் ஒன்றிய செயலாளர் லிங்கசாமி , கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன், காளப்பட்டி பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் குறிஞ்சி மலர் பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுபத்ரா புருஷோத்தமன், கோவிந்த ராஜன், பிரபாகரன், எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சுகுமார், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பொள்ளாச்சி ரகுபதி, விஜயகுமார், நாச்சப்பன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.