மின் கட்டண உயர்வுக்கு தொழில் வர்த்தக சங்கம் கண்டனம்


மின் கட்டண உயர்வுக்கு தொழில் வர்த்தக சங்கம் கண்டனம்
x
தினத்தந்தி 10 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 6:45 PM GMT)

மின் கட்டண உயர்வுக்கு தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தொழில் மற்றும் வர்த்தக பிரிவுகளுக்கான மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்த முடிவெடுத்துள்ளது வருந்தத்தக்கது. ஏற்கனவே தாங்க முடியாமல் உள்ள மின் கட்டணத்தை மேலும் உயர்த்துவது, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வழிவகுக்கும். வீடுகளுக்கு மட்டுமன்றி அனைத்து தரப்பினருக்கும் நியாயமான மின் பயன்பாட்டு கட்டணம் தொடருமானால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும். வணிக பயன்பாட்டுக்கு உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வும் பொதுமக்களைத்தான் பாதிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மாதாமாதம் மின் பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்துவோம் என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த கட்டண உயர்வானாலும் இறுதியில் அது சாமானிய மக்கள் தலையில்தான் விழும் என்பதை தமிழக அரசு புரிந்து கொண்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இலவசங்களின் எண்ணிக்கையை குறைத்து இதுபோன்ற கட்டண உயர்வுகளை தவிர்க்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story