நடைமேடை எண் காட்டாத மின்னணு தகவல் பலகை


நடைமேடை எண் காட்டாத மின்னணு தகவல் பலகை
x

நடைமேடை எண் காட்டாத மின்னணு தகவல் பலகையை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகளுக்கு முக்கிய சந்திப்பு பகுதியாக இருந்து வருகிறது. இங்கு தினமும் 30 ஆயிரம் பயணிகள் வரை வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தை பழமை மாறாமல் நவீனப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அதிக பயணிகளை கையாளும் வகையில், ரெயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் அருகே புதிதாக ரூ.3 கோடியே 15 லட்சம் செலவில் 2-வது நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இந்த நுழைவு வாயிலில் இருந்து நகரும் படிக்கட்டுகள் மூலம் ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளுக்கும் எளிதாக செல்ல முடியும். தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 8-வது நடைமேடை வழியாக ரெயில் நிலையத்துக்குள் நுழையும் வகையில் இந்த நுழைவு வாயில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2-வது நுழைவு வாயிலில் ரெயில்கள் வரும் நேரத்தை குறிக்கும் மின்னணு தகவல் பலகை உள்ளது. இந்த தகவல் பலகையில் ரெயில்கள் வரும் நேரம் குறிப்பிடப்படுகிறது. ஆனால் எந்த நடைமேடையில் ரெயில் வருகிறது என்பது தகவல் பலகையில் இடம் பெறவில்லை. இதனால் ரெயில் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். மேலும் கடைசி நேரத்தில் ரெயிலில் ஏற வரும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சில நேரங்களில் ரெயிலை தவற விடும் நிலையும் உள்ளது. எனவே இந்த மின்னணு தகவல் பலகையை சரி செய்ய ரெயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story