ஆறுபுள்ளி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
ஆறுபுள்ளி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிங்கம்புணரி
ஆறுபுள்ளி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆறுபுள்ளி அம்மன் கோவில்
சிங்கம்புணரி மேலத்தெரு பகுதியில் உள்ள மேலத்தெரு மூன்று கரை பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஆறுபுள்ளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளன்று கரகம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் பூக்குழி இறங்குதல் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு மேலத்தெரு மூன்று கரை பங்காளிகள் ஒன்றிணைந்து சிங்கம்புணரி பிளார் ஊருணி கரையில் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு கரகம் அலங்காரம் செய்து சாமி அழைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சாமி அழைத்து கரகம் சுமந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கப்பட்டது. மேலும் கரகத்தை சுமந்து கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் பிளார் ஊருணியில் இருந்து வண்ணங்குண்டு வேளார் தெரு வழியாக ஆறுபுள்ளி அம்மன் கோவிலுக்கு கரகத்தை சுமந்து கொண்டு நடந்து வந்தனர்.
பூக்குழி இறங்குதல்
கோவிலை அடைந்த கரகம் அங்கு சாமி ஆட்டம் மற்றும் குறி சொல்லுதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலில் கரகம் இறக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
கோவில் முன்பு பிரமாண்ட குழி அமைக்கப்பட்டு அதில் பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. முன்னதாக கோவில் சாமியாடிகள் மற்றும் பூசாரிகள் பூக்குழியில் இறங்கி சிவனே போற்றி, அம்மனே போற்றி எனக்கூறி நடந்து சென்றனர். அதனை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி மேலத்தெரு மூன்று கரை பங்காளிகள், ஆறுபுள்ளி அம்மன் கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.