தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வானரமுட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா கிரேனா ராஜாத்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பட்டயத்தேர்வு
வருகிற ஜூன் மாதம் நடைபெறவுள்ள தொடக்க கல்வி பட்டய தேர்விற்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகலுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து உரிய தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணம்
தேர்வு கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் முதலாம் ஆண்டுக்கு ரூ.100, 2-ம் ஆண்டுக்கு ரூ.100, பதிவு மற்றும் சேவை கட்டணமாக ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும்.
9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) வருகிற 15, 16-ந்தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணமாக கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
தபால்வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தேர்வர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இந்த தகவலை வானரமுட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா கிரேனா ராஜாத்தி தெரிவித்துள்ளார்.