தளி அருகே சாலையில் நின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்


தளி அருகே சாலையில் நின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:45 PM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே சாலையில் நின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

காட்டு யானை

தேன்கனிக்கோட்டை தாலுகா ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானை தனியாக சுற்றித்திரிகிறது. நேற்று காலை இந்த யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. பின்னர் தளி அருகே தமிழக எல்லையான ஆச்சுபாலு என்ற மலை கிராமத்திற்குள் புகுந்தது.

தொடர்ந்து அங்குள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சாலையை மறித்தது

இதையடுத்து அந்த யானை ஆச்சுபாலு கிராமம் அருகே தளியில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் சாலையை வழிமறித்து நின்றது. இதனை பார்த்து அச்சமடைந்த வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தினர்.

பின்னர் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு சாலையில் நின்ற காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானை வனப்பகுதிக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். கிராமத்துக்குள் புகும் இந்த காட்டு யானையை அடந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story