புதிய நீச்சல் குளத்தில் 'பாப்கட்டிங்' செங்கமலம் யானை உற்சாக குளியல்


புதிய நீச்சல் குளத்தில் பாப்கட்டிங் செங்கமலம் யானை உற்சாக குளியல்
x

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய நீச்சல் குளத்தில் ‘பாப்கட்டிங்’ செங்கமலம் யானை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது.

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய நீச்சல் குளத்தில் 'பாப்கட்டிங்' செங்கமலம் யானை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது.

'பாப்கட்டிங்' செங்கமலம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள யானை செங்கமலம் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் காணப்படும்.இதனால் இந்த யானை பக்தர்களால் 'பாப்கட்டிங்' செங்கமலம் என அன்புடன் அழைக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யானை செங்கமலத்தை பார்க்காமல் செல்லமாட்டார்கள்.

வித்தியாசமான தலைமுடி

குறிப்பாக விடுமுறை நாட்களில் யானை செங்கமலத்தை காண கோவிலுக்கு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பக்தா்களின் செல்லப்பிள்ளையாக திகழும் யானை செங்கமலத்தின் தலையில் உள் முடிகளின் அமைப்பு மற்ற யானைகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்.தலையில் வளர்ந்த முடிகள் முன்பக்க நெற்றியை மறைக்கும் வகையில் கீழ்நோக்கி வரிசையாக இருக்கும். யானை செங்கமலத்தை குளிக்க வைக்கும்போது வாரத்துக்கு ஒரு முறை அதன் தலைமுடிக்கு ஷாம்பு போடப்படும். பின்னர் யானையின் தலைமுடியை அதற்கென வடிவமைக்கப்பட்ட பெரிய சீப்பு மூலம் சீவி அலங்கரித்து நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யாைனயை கண்டால் பக்தர்கள் மனதில் தனி குதூகலம் பிறக்கும்.

நீச்சல் குளம்

இந்த யானைக்கு வெப்பம் தாக்காதவாறு இருக்க யானை இருக்கும் ஷெட்டின் மேற்புறம் மூங்கில் தட்டியால் பந்தல் அமைக்கப்பட்டு மின்விசிறியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும் கால்நடை டாக்டர் மூலம் யானையின் உடல் நலன் பரிசோதிக்கப்படுகிறது.யானையை குளிக்க வைக்க என தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் யானை மீது பீய்ச்சிஅடிக்கப்பட்டு யானை குளிப்பாட்டப்பட்டு வந்தது. இதில் போதிய அளவில் யானையின் உடலை குளிர்விப்பது சிரமமாக இருந்தது. எனவே யானைக்கு நீச்சல் குளம் கட்ட வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

உற்சாக குளியல்

இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் செலவில் கோவில் வளாகத்தில் யானைக்கு தனியாக நீச்சல் குளம் கட்டும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்தது. நீச்சல் குளம் 25 அடி நீளம், 25 அடி அகலம், 9 அடி ஆழத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீர் நிரப்பும் பணி நிறைவடைந்து.நேற்று காலை நீச்சல் குளம் திறப்பு விழா நடந்தது. நீச்சல் குளத்தை டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் செங்கமலம் யானை பக்தர்கள் புடை சூழ நீச்சல் குளத்துக்கு அழைத்து வரப்பட்டது.நீச்சல் குளத்தை கண்டதும் குதூகலம் அடைந்த செங்கமலம் யானை அதன் உள்ளே இறங்கி தண்ணீரை துதிக்கையால் எடுத்து தனது உடல் மேல் பீய்ச்சியடித்து உற்சாகமாக குளித்தது. அப்போது குளத்தில் யானை விளையாடி மகிழ்ந்ததை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பின்னர் பாகன் ராஜா யானையை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன், ஆணையர் சென்னு கிருஷ்ணன், துணைத் தலைவர் கைலாசம், நகர தி.மு.க செயலாளர் வீரா.கணேசன், கோவில் செயல் அதிகாரி மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story