யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
வால்பாறை
வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
யானைகள் கணக்கெடுக்கும் பணி
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரக வனப்பகுதிகளில் நேற்று யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை கள இயக்குனர் பார்க்வே தேஜா ஆகியோரின் உத்தரவின் பேரில் வனத்துறையின் முன்கள பணியாளர்களாகிய வனவர், வனப்பாதுகாவலர், வனக்காவலர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர் ஆகியோருக்கு அட்டகட்டி வன மேலாண்மை பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமை தாங்கினார்.
நேர்கோட்டு பாதை
இதனைத்தொடர்ந்து நேற்று மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் வனச்சரகர் மணிகண்டன், வால்பாறை வனச்சரக பகுதியில் வனச்சரகர் வெங்கடேஷ் ஆகிய 2 பேரும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் யானைகள் வழித்தடங்கள், யானைகள் வலசை போகும் பாதைகள், ஏற்கனவே யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மானாம்பள்ளி வனச்சரகத்தில் நீராறுவனப் பகுதியில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) அனைத்து வனப்பகுதியிலும் உள்ள நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இறுதி நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நீர்நிலை பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.
கணக்கெடுப்பு விவரங்கள்
அதனை தொடர்ந்து கணக்கெடுப்பின் விவரங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.
எப்போதும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் போது யானைகளும் கணக்கெடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கேரளா, கர்நாடகா வனப் பகுதியில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.