சேற்றில் சிக்கி பெண் யானை சாவு

பென்னாகரம் அருகே உள்ள சின்னாற்றில் சேற்றில் சிக்கி பெண் யானை பலியானது. போடூர் வனப்பகுதியில் மற்றொரு ஆண் யானையும் திடீரென இறந்தது.
பென்னாகரம்
பென்னாகரம் அருகே உள்ள சின்னாற்றில் சேற்றில் சிக்கி பெண் யானை பலியானது. போடூர் வனப்பகுதியில் மற்றொரு ஆண் யானையும் திடீரென இறந்தது.
பெண் யானை பலி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் வன விலங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு கோடுபட்டி சின்னாறு வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருந்தன.
இந்த யானைகள் வனப்பகுதியில் உள்ள சின்னாற்றுக்கு தண்ணீர் தேடி வந்துள்ளன. அப்போது 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த போது சேற்றில் சிக்கிக்கொண்டது. சேற்றில் சிக்கிய யானை வெளியேற முடியாமல் பரிதாபமாக இறந்தது. யானை இறந்து 2 நாட்களுக்கு பின்னர் சின்னாற்றில் மிதந்து வந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் தண்ணீரில் மிதந்த யானையின் உடலை மீட்டனர். பின்னர் அந்த இடத்திலேயே கால்நடை டாக்டர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த யானையை பொக்லைன் எந்திரம் மூலம் வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.
மற்றொரு யானை
இதனிடையே பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று போடூர் வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது 8 வயது ஆண் யானை என்று தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர் பிரகாஷ் தலைமையில் சம்பவ இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.
தொடர்ந்து யானை இயற்கையாக மரணம் அடைந்ததா? அல்லது வனப்பகுதியில் விஷக்காயை சாப்பிட்டு இறந்ததா? என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
பென்னாகரம் அருகே 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






