யானைக்கால் நோய் தடுப்பு முகாம்


யானைக்கால் நோய் தடுப்பு முகாம்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை, ஆனைமலையில் யானைக்கால் நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் 800 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை, ஆனைமலையில் யானைக்கால் நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் 800 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

ரத்த மாதிரி

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் வால்பாறை, ஆனைமலை பகுதியில் யானைக்கால் நோய் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

வால்பாறை நகராட்சி பகுதியில் உள்ள கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார பணியாளர்கள் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 600 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இது பொள்ளாச்சி, கோவை போன்ற இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

இதன் முடிவில் யானைக்கால் நோய் பாதிப்பு யாருக்காவது இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பது, அந்த நோயை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது போன்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமண் தெரிவித்தார். மேலும் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று ஆணையாளர் பாலு கூறினார்.

இதேபோன்று ஆனைமலை தாலுகாவில் பெத்தநாயக்கனூர், ஜே.ஜே.நகர், ரமணமுதலிபுதூர், சோமந்துறை சித்தூர் போன்ற பகுதிகளில் யானைக்கால் நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் செந்தில்நாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் தரணி மற்றும் செல்லதுரை ஆகியோர் கலந்துகொண்டு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுத்தனர்.


Next Story