வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் யானைகள்
வரட்டுப்பள்ளம் அணைக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வருவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்தியூர்
வரட்டுப்பள்ளம் அணைக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வருவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
யானைகள்
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் சிறுத்தைப்புலி, யானை, கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன. மேலும் இந்த மலைப்பகுதியின் அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது.
எனவே வனவிலங்குகள் தங்களுடைய தாகம் தீர்க்க வரட்டுப்பள்ளம் அணைக்கு வருவது வழக்கம். தற்போது பர்கூர் மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை. இதனால் யானை, கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் அடிக்கடி வரட்டுப்பள்ளம் அணைக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் வருகின்றன. குறிப்பாக காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்கு செல்கின்றன. அவ்வாறு வரும் காட்டுயானைகள் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள ரோட்டில் சுற்றித்திரிகின்றன. எனவே வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
வனத்துறையினர் அறிவுறுத்தல்
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'வனவிலங்குகள் அடிக்கடி வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிப்பதற்காக வருகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகள் அணை அருகே உள்ள ரோட்டை கடந்து செல்கின்றன. மேலும் சில நேரங்களில் ரோட்டில் உலா வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் வனவிலங்குகளை கண்டால் தங்களுடைய வாகனங்களை ரோட்டோரம் நிறுத்த வேண்டும். வனவிலங்குகளை எந்தவித தொந்தரவும் செய்யக்கூடாது,' என அறிவுறுத்தி உள்ளனர்.