ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் தகுதியானவர்கள் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் தகுதியானவர்கள் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
மகளிர் உரிமைத்தொகை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் முதல் கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி ஆகிய வட்டங்களில் முகாம் நடைபெற்றது. 2-ம் கட்டமாக திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய வட்டங்களில் முகாம் நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கலாம்
வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வருகிற 18, 19, 20-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04322-295022, வாட்ஸ்-அப் எண்-94450 45622 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.