ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அவசரகால ஒத்திகை
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் டீன் சுகந்தி ராஜகுமாரி மற்றும் மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் டீன் சுகந்தி ராஜகுமாரி மற்றும் மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அவசரகால ஒத்திகை
சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளில் அவசரகால ஒத்திகை நடத்தி, ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொரோனா வார்டிலும் அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
பரபரப்பு
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த ஒத்திகையின்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சைக்கு வரும் சாதாரண நோயாளியை எவ்வாறு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்தும், அதிக பாதிப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்படும் நோயாளியை தீவிர சிகிச்சைப்பிரிவு வார்டில் எவ்வாறு அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்? என்பது குறித்தும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கவச உடை அணிந்தபடி தத்ரூபமாக ஒத்திகையில் ஈடுபட்டனர்.
108 ஆம்புலன்சில் ஒரு நோயாளியை அழைத்து வருவது போன்றும், அவருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிப்பது குறித்தும் டாக்டர்களும், நர்சுகளும் ஒத்திகை செய்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) விஜயலட்சுமி, உதவி உறைவிட மருத்துவ அதிகாரி ரெனிமோள், கொரோனா வார்டு கண்காணிப்பு அதிகாரி ஜான் கிறிஸ்டோபர், நரம்பியல் துறை பேராசிரியர் கிங்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா வார்டில் நடந்த திடீர் ஒத்திகையால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.
ஆக்சிஜன் பிளாண்டுகள்
கொரோனா வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 படுக்கைகளும், ஆக்சிஜன் வார்டில் 40 படுக்கைகளும், சாதாரண கொரோனா வார்டில் 40 படுக்கைகளும் என மொத்தம் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்பாட்டில் உள்ள 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் பிளாண்ட், 3 ஆயிரம் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் பிளாண்ட், ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 2 பிளாண்டுகள் ஆகியவற்றையும் மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.