இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு


கரூா் மாவட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி தி.மு.க.,அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கரூர்

தி.மு.க.

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மின்சாரம், ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ.க்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர், புதிய தமிழகம்

இதேபோல, கரூர் காமராஜர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சி சார்பில் கரூர் கோவை ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனி உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையிலும், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் மாவட்டத்தலைவர் மாரியப்பன் தலைமையிலும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேவேந்திர குல வேளாளர் உறவுகள் சங்கம்

இதேபோல, கரூர் ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் அருகே, தியாகி இம்மானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு கரூர் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story