அழிந்து வரும் நாட்டின நாய்களை ராணுவம், பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தல்
அழிந்து வரும் நாட்டின நாய்களை ராணுவம், பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
நாட்டு இன நாய்கள் மற்றும் வேட்டைக்காரர்கள் மீட்பு மாநாடு தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பணிக்குழு தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக ஐ.ஜே.கே. அகில இந்திய தலைவர் ரவி பச்சமுத்து, மாநில துணைபொதுச்செயலாளர் நெல்லை ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் விளைநிலங்களில் விவசாயத்தை அழிக்கக்கூடிய பல்வேறு வகையான விலங்குகளை விரட்டவும், கிராம தெய்வங்களுக்கு பாரிவேட்டைக்கு நாட்டு இன நாய்களை பயன்படுத்துவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
தனி வாரியம்
அழிந்து வரும் நாட்டின நாய்களான கொம்பை, கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகியவற்றை ராணுவம், பேரிடர் மீட்பு, ரெயில்வே பாதுகாப்பு, காவல்துறை ஆகியவற்றில் அதிகளவில் ஈடுபடுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின நாய்களை பாதுகாக்கவும், இந்த நாய்களை அதிகமாக இனப்பெருக்கம் செய்து உலக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதோடு, நாட்டு இன நாய்கள் வளர்ப்போருக்கு அடையாள அட்டையை வழங்க வேண்டும். நாட்டு இன நாய்களை செல்லப்பிராணிகள் பட்டியலில் இருந்து நீக்கி, கால்நடைகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள நாட்டின நாய்களை பாதுகாக்க கால்நடைத்துறையின் கீழ் தனி வாரியத்தை உருவாக்கி, தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சடையன் வரவேற்றார். முடிவில் மாநாட்டு ஆலோசகர் வேல்மயில் நன்றி கூறினார்.