மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
x

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்

திருவாரூர்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மாவட்ட ஊராட்சி தலைவர் பேசினார்.

ஊராட்சி குழு கூட்டம்

திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி செயலர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சவுந்தர்யா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பேசுகையில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாணவர்களின் கற்றல் திறனை நிச்சயம் மேம்படுத்தும். மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்வு காணும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உரிய கவனம் செலுத்த வேண்டும்

மழை காலத்தை கருத்தில் கொண்டு பழுதடைந்த அங்கன்வாடி கட்டிட பணிகளை துரிதப்படுத்தி முடிக்க துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பி்ன்னர் துணைத்தலைவர் கலியபெருமாள் பேசுகையில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சிறப்புக்குரியது. இந்த காலை உணவு திட்டத்தில், அனைத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அந்தந்த பகுதி பள்ளிகளுக்கு நேரில் சென்று பங்கேற்று, இந்த திட்டத்தை இன்னும் செம்மையாக செயல்படுத்தி உறுதுணையாக இருக்க வேண்டும். அரசின் எந்த திட்டங்களாக இருந்தாலும், வளர்ச்சி பணிகளாக இருந்தாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்தால் தான் வெற்றி அடையும் என்றார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

கூட்டத்தில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட ஊராட்சி சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story