கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்திதினசரி சந்தை வியாபாரிகள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தினசரி சந்தை வியாபாரிகள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை தினசரி சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பஜார் வீதிகள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடையடைப்பு
கோவில்பட்டியில் நகராட்சி பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தற்போது இயங்கி வரும் அனைத்து கடைகளுக்கும் பாதுகாப்பான அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை வணிகர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். தினசரி சந்தையில் புதிய கடை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்பு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய கொடுப்பது என தமிழக அரசு ஒப்புதலுடன் நகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
தினசரி சந்தைக்கான புதிய கட்டிடம் வரைபடம் குறித்த நகலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். கடந்த 1-ந் தேதி நகராட்சி நிர்வாகத்தால் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்து அறவழியில் போராடிய 6 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதனால் தினசரி சந்தையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும், தினசரி சந்தை நுழைவாயில் முன்பு பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்த வியாபாரிகள் தயாராகினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் பந்தல் அமைக்க தடை விதித்தனர். இதையடுத்து வியாபாரிகள் சந்தையின் உள்பகுதியில் பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தினசரி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச் செல்வம் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர்கள் ஜெகநாதன், சின்னமாடசாமி, வணிகர் சங்கங் களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செல்லத்துரை மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
தெருக்கள் வெறிச்சோடின
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஜவுளி ரெடிமேட் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து கடைகளை திறக்கவில்லை. இதன் காரணமாக கோவில்பட்டி பிரதான சாலை, மாதாங் கோவில் சாலை, தெற்கு பஜார், தினசரி சந்தை சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பஜார் வீதிகள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.