பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி: மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி: மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சென்னையில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மக்களை தேடி மருத்துவ திட்டமானது கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரையில் 1 கோடி பேருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் மக்களை தேடி மருத்துவ திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 11 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.4,500 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தினமும் 2 மணி நேரம் என்று குறிப்பிட்டாலும், இல்லம் தேடி மருந்து மாத்திரை வழங்குவது, ஸ்கிரீனிங் செய்து சர்க்கரை அளவு பரிசோதிப்பது, உயர் ரத்த அழுத்தம் பரிசோதிப்பது, முகாம்களில் முழு நேரம் பணியாற்றுவது உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் வெளிநோயாளிகள் மருத்துவம் பார்க்க உடன் இருப்பது, பிரசவ வார்டுகளில் பணியாற்றுவது, ரிவ்யூ மீட்டிங் செல்வது, ஸ்கோரிங் கார்டு எழுதுவது, டேட்டா என்ட்ரியை போனில் பதிவு செய்வது என முழு நாள் பணியாக விடுப்பு இல்லாமல் பணியாற்றுகின்றனர்.

மாபெரும் பேரணி

இந்தநிலையில் சில மேல் அதிகாரிகள் பணி நேரத்தில் கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு இடையில் பெரும் சிரமத்தோடு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதனிடையே, தங்களுக்காக ஒரு சங்கம் வேண்டும் என்று முடிவு செய்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் சி.ஐ.டி.யூ.வின் உதவியுடன தொடங்கப்பட்டது தான் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம்.

இதனிடையே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் 11 ஆயிரம் ஊழியர்களின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். புதுப்பேட்டை சித்ரா தியேட்டரில் இருந்து தொடங்கிய மாபெரும் பேரணி சிந்தாதிரிப்பேட்டை கூவம் அருகே நிறைவுபெற்றது. பின்னர் திரளாக கூடியிருந்த ஊழியர்கள் கோஷம் எழுப்பியும், பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் மாநில தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

8 கோரிக்கைகள்

அவர்களின் கோரிக்கைகள் வருமாறு:-

* மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் முழு நேர ஊழியர்களாக்க வேண்டும்.

* மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

* ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

* பயணப்படி, மருத்துவ உபகரண பராமரிப்பு படி, உணவுபடி, மனை படி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.

* ஊக்கத்தொகையை ஊழியர்களின் வங்கி கணக்கில் அரசே நேரடியாக செலுத்த வேண்டும்.

* சீருடை மற்றும் அடையாள அட்டைகளை தமிழ்நாடு அரசு நேரடியாக வழங்க வேண்டும்.

* பணி காலத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

* தொழிற்சங்க நடவடிக்கைக்காக பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஊழியர்களை உடனடியாக மீண்டும் பணியமர்த்த வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்திரராஜன், சி.ஐ.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story