தக்கலை அருகே டெம்போ மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
தக்கலை அருகே டெம்போ மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தக்கலை:
கருங்கல் அருகே உள்ள குடியிருப்புவிளையை சேர்ந்தவர் சிபி ஜேக்கப் (வயது35). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் தனது அம்மாவை பார்ப்பதற்காக வெட்டுக்குழிக்கு சென்றார். பின்னர் வேலைக்கு செல்வதற்காக அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மேக்காமண்டபம்- அழகியமண்டபம் சாலையில் வந்து கொண்டிருந்தார். பிலாங்காலை பகுதியில் வந்த போது எதிரே வந்த டெம்போ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிபி ஜேக்கப் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய டெம்போவை ஓட்டிவந்த பரைக்கோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சிபி ஜேக்கப்பிற்கு ஆட்லின் அனிதா ஆலிஸ் (29) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.