எழும்பூரில் பயங்கரம் தனியார் நிறுவனத்தில் ஊழியர் குத்திக்கொலை


எழும்பூரில் பயங்கரம் தனியார் நிறுவனத்தில் ஊழியர் குத்திக்கொலை
x

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை,

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் விவேக்(வயது 30). இவர், சென்னை எழும்பூரில் உள்ள 'ஹாத்வே' தனியார் இண்டர் நெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். பட்டதாரி. இவருடைய மனைவி தேவப்பிரியா, எழும்பூர் தாசில்தார் அலுவலக ஊழியர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு விவேக், அயனாவரம், பக்தவச்சலம் தெருவுக்கு வசிப்பிடத்தை மாற்றி விட்டார்.

தினமும் காலையில் தனது மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் எழும்பூர் வருவார். தாலுகா அலுவலகத்தில் மனைவியை இறக்கிவிட்டு, தான் வேலை பார்க்கும் அலுவலகம் வருவார். இவரது அலுவலகம், எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளது.

விவேக், நேற்று வழக்கம்போல் மனைவியை தாலுகா அலுவலகத்தில் விட்டு, விட்டு தனது அலுவலகம் வந்தார். பின்னர் முதல் மாடியில் உள்ள தனது அலுவலகத்தில் உட்கார்ந்து பணியை தொடங்கினார்.

அதே அலுவலகத்தில் வேலை பார்த்தவர் சந்தோஷ் என்ற முத்துகுமார் (22). பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். அவர், சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், எழும்பூர் அலுவலகத்தில் இருந்து சவுகார்பேட்டைக்கு மாற்றப்பட்டார். தன்னை மீண்டும் எழும்பூர் அலுவலகத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து, சந்தோஷ் தினமும் எழும்பூர் அலுவலகம் வந்து தகராறு செய்வார்.

நேற்று காலையிலும் சந்தோஷ் வழக்கம்போல் எழும்பூர் அலுவலகம் வந்தார். அங்கு வந்தவுடன் முதலில் உட்கார்ந்திருந்த விவேக்கிடம் சென்றார். 'சாப்பிட்டியா?', என்று கனிவுடன் கேட்டார். சாப்பிட்டு விட்டேன் என்று விவேக் பதில் அளித்தார். "எல்லோரும் சேர்ந்து சதி செய்து என்னை மாற்றி விட்டீர்கள்", என்று வழக்கம்போல பேச ஆரம்பித்தார்.

உடனே விவேக், "வேண்டுமானால் நீ இங்கு வந்து வேலை செய்" என்றார். ஆனால் அதை பொருட்படுத்தாத சந்தோஷ், திடீரென்று ஆவேசமாக கத்திக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், விவேக்கை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. பக்கத்து அறையில் உட்கார்ந்திருந்த அருண்குமார் என்ற ஊழியர், விவேக்கை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. உடனே அவர் தனது அறைக்கு ஓடிச்சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த இன்னொரு ஊழியரையும் சந்தோஷ் குத்தப்பாய்ந்தார். அந்த ஊழியரும் உயிர் பிழைத்தால் போதும் என்று பயந்து ஓடி ஒளிந்தார். கண்ணில் பார்த்தவர்களை எல்லாம் கத்தியுடன் குத்தப்பாய்ந்த சந்தோஷ் அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று பதுங்கிக்கொண்டார். அலுவலக கதவை பூட்டியதால் அவர் வெளியில் தப்பி ஓட முடியவில்லை.

கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய விவேக், பரிதாபமாக இறந்து போனார். இது பற்றி எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் ரகுபதி, இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொலை செய்யப்பட்ட விவேக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கொலையாளி சந்தோஷ் கைது செய்யப்பட்டார். அவரை எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தனது பணியிட மாற்றத்துக்கு காரணமானவர்களை தீர்த்து கட்டும் வெறியோடுதான், சந்தோஷ் கத்தியுடன் வந்துள்ளார் என்றும், அதில் முதலில் மாட்டிய விவேக், உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்றும் சில ஊழியர்கள் கதவை பூட்டிக்கொண்டதால், உயிர் பிழைத்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் கூட கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு, சந்தோஷ் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த படுகொலை சம்பவம் நேற்று காலை எழும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்திக்குத்தில் காயம் அடைந்த இன்னொரு ஊழியர் அருண்குமாரும், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.


Next Story