விடுதிகளில் இரவு நேர காவலர் நியமனம் செய்ய பணியாளர்கள் வேண்டுகோள்
மாணவர்களின் நலன் கருதி விடுதிகளில் இரவு நேர காவலர் நியமனம் செய்ய பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜாங்கம், செயலாளர் நடேசன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் நிறுவனர் தங்கவேல் தொடக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் சிங்காரம் சிறப்புரை ஆற்றினார். சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆண்டியப்பன் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்டந்தோறும் விடுதி சமையலர்கள், காவலர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு, அதன் அடிப்படையில் பதவி மற்றும் கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு தமிழக அரசு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விடுதிக்கு 2 சமையலர்களை நியமனம் செய்ய வேண்டும். விடுதியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியை நிரப்பிட வேண்டும். மாணவர்களின் நலன் கருதி இரவு நேர காவலர் நியமனம் செய்ய வேண்டும். ஆண்கள் விடுதியில் ஆண் பணியாளரும், பெண்கள் விடுதியில் பெண் பணியாளரும் நியமனம் செய்ய வேண்டும். பெரம்பலூர் மாவட்ட விடுதி சமையலர், காவலர்கள் மட்டும் அடிப்படை பணியாளர்கள் அல்ல என்று எஸ்.சி.ஏ. வழங்கப்படாமல் உள்ளது. எனவே ஆதிதிராவிடர் நல இயக்குனர் பெரம்பலூரில் நிறுத்தம் செய்யப்பட்ட எஸ்.சி.ஏ. வழங்க ஆணை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். விடுதி காவலர், துப்புரவு பணியாளர், ஏவலர்களுக்கு உணவு கட்டணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.