பஸ்களை இயக்காமல் ஊழியர்கள் தர்ணா
பஸ்களை இயக்காமல் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகரில் புதிய பஸ்நிலையம் அருகில் அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை அலுவலகம் உள்ளது. இங்கிருந்துதான் பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த கிளையில் உள்ள பொது செயலாளர் மற்றும் கிளைச்செயலாளர் தரப்பினரிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் கடுமையாக பேசிக்கொண்ட வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வாக்குவாத வீடியோ சர்ச்சையில் சிக்கிய சிலரை மேலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணி நீக்கத்தினை கண்டித்து அந்த தரப்பினரை சேர்ந்த டிரைவர்கள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நேற்று அதிகாலை திடீரென்று பணிமனைக்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்களை இயக்காமல் பணிகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டதால் புறநகர் கிளையில் இருந்து பஸ்கள் வெளியில் செல்லாமல் இருந்தது.
இதனால் வெளியூர்களுக்கு செல்வதற்கு பஸ்கள் இயக்கப்படாமல் பயணிகள் என்ன காரணம் என தெரியாமல் பணிமனை முன்பு திரண்டனர். நேரம் அதிகமானதால் பயணிகள் காத்திருப்பு அதிகமாக உடனடியாக பஸ்களை இயக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து பணி நீக்கம் தொடர்பாக பரிசீலனை செய்து உரியன செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிக்கு திரும்பினர்.