பண்ருட்டியில் 50 அரசு பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம்
பண்ருட்டியில் கண்டக்டரை உருட்டுக்கட்டையால் தாக்கிய கும்பலை கைது செய்யக்கோரி 50 அரசு பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு விழுப்புரம் செல்வதற்காக பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை மாயகிருஷ்ணன் என்பவர் ஓட்டினார். கண்டக்டராக தரன்சிங்(வயது 38) என்பவர் பணியில் இருந்தார்.
அந்த பஸ்சை டிரைவர், பஸ் நிலையத்தில் விழுப்புரம் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்துவதற்காக பின்னால் இயக்கினார். அப்போது, அந்த இடத்தில் நின்றிருந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர், நான் நிற்பது கண்ணுக்கு தெரியவில்லையா? என கேட்டு கண்டக்டரை தாக்கினார்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் இதுபற்றி அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதற்காக பஸ்சை பணிமனைக்கு ஓட்டி சென்றனர். அப்போது பஸ்சை பின்தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த வாலிபர், மீண்டும் கண்டக்டர் தரன்சிங்கை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதில் காயமடைந்த தரன்சிங்கை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
போராட்டம்
இந்த சம்பவத்தை அறிந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் பஸ் நிலையம் மற்றும் பணிமனையில் நிறுத்தப்பட்டன. இதனால் பண்ருட்டி பகுதி கிராம புறங்கள், நகர்புறங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சில பயணிகள் வேறு வழியின்றி தனியார் பஸ்களில் முண்டியடித்தபடி ஏறிச் சென்றனர்.
இதனிடையே அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கண்டக்டர் தரன்சிங்கை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர்.
பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தரன்சிங்கை தாக்கிய கும்பலை கைது செய்யும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறினர்.
அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, கண்டக்டரை தாக்கிய கும்பல் யார்-யார்? என கண்டறிந்து இரவுக்குள் அனைவரையும் கைது செய்வோம் என்றார். இதனை ஏற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வாலிபர் கைது
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், கண்டக்டரை தாக்கியவர் பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(26) என்பது தெரியவந்தது. இதையடு்த்து தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே மாலை 4 மணிக்கு மேல் பண்ருட்டியில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பேராட்டத்தால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.