தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஓசூரில் நாளை நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஓசூர்:
வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்துகின்றன. இந்த முகாமை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். இதையொட்டி முகாம் நடைபெறவுள்ள கல்லூரி வளாகத்தில் முன்னேற்பாடு பணிகளை, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில, 5 முதல் பட்டப்படிப்பு வரை படித்த மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும். முகாமில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
பணி நியமன ஆணை
இந்த முகாமினை, தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து, மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கு மாவட்ட மற்றும் ஓசூர் மாநகர தி.மு.க சார்பில் செய்யப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் முகாமில் கலந்து கொள்வதற்கு வசதியாக, அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் மற்றும் பஸ் நிலையங்களில் இருந்தும், சிறப்பு பஸ் மற்றும் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம், முன்மாதிரியாக இருந்தது என்று உதயநிதி ஸ்டாலினிடம் பாராட்டு பெறும் வகையில், அனைவரது ஒத்துழைப்புடனும் முகாமினை மிக சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரா மணி, மண்டல தலைவர் ரவி, மாநகராட்சி கவுன்சிலர் சென்னீரப்பா, தொ.மு.ச. மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கட்சியினர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.