விருத்தாசலத்தில் வேலைவாய்ப்பு முகாம்:தடைகற்களை படிக்கட்டுகளாக அமைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு


விருத்தாசலத்தில் வேலைவாய்ப்பு முகாம்:தடைகற்களை படிக்கட்டுகளாக அமைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு
x

தடைகற்களை படிக்கட்டுகளாக அமைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விருத்தாசலத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

கடலூர்

விருத்தாசலம்,

வேலைவாய்ப்பு முகாம்

முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ், வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வீரராகவராவ், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மண்டல வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குனர் சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆறுமுகம் வெங்கடேஷ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தி தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் பணி ஆணையை வழங்கி பேசியதாவது:-

1½ லட்சம் பேருக்கு வேலை

முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரும் வகையில் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. விருத்தாசலத்தில் நடந்தது 22-வது முகாம் ஆகும். இதுவரை நடந்த முகாம்களின் மூலம் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் தான் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. இந்த முகாம்கள் கலை, அறிவியல் படித்த மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தமிழக முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்கள் என்ன படிக்கலாம்? என்ன வேலையை தேர்வு செய்யலாம் என தெரிந்து கொள்வதற்கான திட்டமாக அமைந்துள்ளது.

விடாமுயற்சி, தன்னம்பிக்கை

தனியார் துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது போன்ற முகாம்கள் மூலம் அந்த காலி பணியிடங்களும் நிரப்பப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஸ்டால் அமைத்து தகுதியுள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. நல்ல சிந்தனை, உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவை இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். உலகில் முடியாதது எதுவுமில்லை. தடை கற்களை படிக்கட்டுகளாக அமைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் விருத்தாசலம் தாசில்தார் அந்தோணி ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் கனக கோவிந்தசாமி, வேல்முருகன், கோட்டேரி சுரேஷ், மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் அருள்குமார், துணை அமைப்பாளர் வக்கீல் ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம.மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story