சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை1½ லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு-தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் தகவல்


சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை1½ லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு-தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் தகவல்
x
தினத்தந்தி 26 July 2023 5:00 AM IST (Updated: 26 July 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இதுவரை நடந்த 102 வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1½ லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலை பெற்று தரப்பட்டு உள்ளது என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறினார்.

நீலகிரி

குன்னூர்

தமிழகத்தில் இதுவரை நடந்த 102 வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1½ லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலை பெற்று தரப்பட்டு உள்ளது என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் நீலகிரி மாவட்டம் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு பணிக்கு தேர்வானவர்களுக்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பணி ஆணைகளை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக 100 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த முதலாவது வேலைவாய்ப்பு முகாமை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் 100-வது மெகா வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

1½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

தமிழகத்தில் இதுவரை நடந்த பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1½ லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலை பெற்று தரப்பட்டு உள்ளது. வெளி நாடு தரத்தில் இருப்பது போல் தமிழ்நாட்டில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள் 71 இடங்களில் ரூ.2877 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக அளவு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. குன்னூர் ஐடிஐக்கு ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் கருணாகரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையாளர் வீரராகவ ராவ், கலெக்டர் அம்ரித், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, ஆர்டிஓ பூஷ்னகுமார் உள்பட பலர் இருந்தனர்.

இந்த முகாமில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 125 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 628 பேருக்கு முதற்கட்டமாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.



Next Story