பவானியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் இடித்து அகற்றம்; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை


பவானியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் இடித்து அகற்றம்; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
x

பவானியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை இடித்து அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈரோடு

பவானி

பவானியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை இடித்து அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆக்கிரமிப்பு வீடுகள்

பவானி பேரூராட்சியாக இருந்த போது நிர்வாகத்துக்கு குறிப்பிட்ட இடத்தை தனியார் ஒருவர் விற்பனை செய்துள்ளார். ஆனால் காலப்போக்கில் அந்த இடம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டது.

இந்த நிலையில் அந்த இடத்தை மீட்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட இடம் பவானி நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமானது என்றும், அதனை மீட்கலாம் என்றும் தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுத்தது.

நோட்டீஸ்

இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் அங்கு சென்று 'இந்த இடம் பவானி நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான இடம் என கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த இடத்தை காலி செய்ய வேண்டும்' என்று ஆக்கிரமிப்பாளர்களிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால் காலக்கெடு முடிந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் தாமரை தலைமையில் கட்டிட ஆய்வாளர் பெரியசாமி, வருவாய் ஆய்வாளர் ரவி ஆகியோர் மற்றும் பணியாளர்கள் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். பின்னர் ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஓட்டு வீடுகள் மற்றும் ஒரு தறிப்பட்டறையை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்க தொடங்கினார்கள்.

இடித்து அகற்றம்

அப்போது ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் முறைப்படி கால அவகாசம் வழங்கவில்லை. எனவே வீட்டை இடிக்கக்கூடாது என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அதிகாரிகள் அவர்களிடம், 'முறைப்படி 7 நாட்களுக்கு முன்பே நோட்டீசும், 2 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வழங்கிவிட்டோம். ஆனால் நீங்கள் காலி செய்யவில்லை. அதனால் தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்' என்றனர். இதைத்தொடர்ந்து வீடுகளும், தறிப்பட்டறையும் இடித்து அகற்றப்பட்டது. இதையொட்டி பவானி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story