நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு


நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
x

ராஜபாளையம் பகுதியில் நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருவேல மரங்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. மேலும் அணைக்கட்டுகளும், இவற்றிற்கான வரத்து கால்வாய்களும், ஊருணிகளும் உள்ளன. இப்பகுதியை பொருத்தமட்டில் பெரும்பாலான பகுதி மானாவாரி விவசாயத்தை நம்பி உள்ள நிலையில் பாசன வசதிக்கு கண்மாய்களையும், அணைக்கட்டுகளையும் நம்பி விவசாயிகள் உள்ளனர்.

இவைகளில் அனைத்து நீர் நிலைகளிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதுதவிர கண்மாய்களிலும், ஆற்றுபடுகைகளிலும் ஆக்கிரமிப்பும் பரவலாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் கண்மாய்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் அணைப்பகுதிகளிலும் நீரை தேக்கி வைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு

வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளால் கண்மாய்களுக்கும், அணைப்பகுதிகளுக்கும் நீர் வருவதிலும், விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா கூறியதாவது:-

ராஜபாளையம் பகுதியில் உள்ள பெரியாதி குளம் கண்மாய், அயன் கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய், அலப்பச்சேரி கண்மாய், சேந்தனேரி கண்மாய், இரட்டைக் குளம் மாரனேரி கண்மாய், மருங்கூர் கண்மாய் ஆகிய பகுதிகளில் கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நிறைந்து உள்ளன.

மேலும் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட கண்மாய்களும், ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன.

நடவடிக்கை

இதைப்பற்றி குறைதீர்க்கும் நாட்களில் மனு கொடுத்தும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே உள்ளது.

இதனால் விவசாயிகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள கருவேல மரங்களையும் மற்றும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story