திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் ஆக்கிரமிப்பு... பஸ் நிலையத்துக்குள் செல்லாத பஸ்கள்...
திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் ஆக்கிரமிப்பால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்வதில்லை.
திருவெண்ணெய்நல்லூரில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், போலீஸ் நிலையம், பள்ளி- கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
ஆனால் திருவெண்ணெய்நல்லூர் கடை வீதியில் ஆக்கிரமிப்பு காரணமாக கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கடை வீதி வழியாக பஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டிச்செல்லவே டிரைவர்களுக்கு சவாலாக இருந்தது. மேலும் அங்கு சென்று வர காலதாமதம் ஏற்பட்டது. எனவே பஸ் நிலையத்துக்குள் செல்ல டிரைவர்கள் தயக்கம் காட்டினர்.
பயணிகள் அவதி
இதன் காரணமாக பெரும்பாலான பஸ்கள் திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்துக்கு செல்வதில்லை. மாறாக பஸ்கள் அனைத்தும், அணைக்கட்டு சாலை வழியாக விழுப்புரம், பண்ருட்டி, அரசூர் ஆகிய இடங்களுக்கு சென்று விடுகின்றன. மேலும் பெரியசெவலை, உளுந்தூர்பேட்டை செல்பவர்களும் நடந்து சென்று சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். அணைக்கட்டு சாலையிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதால் பஸ் நிலையத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்கின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு வருபவர்களும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லை என்று மக்கள் புலம்புகிறார்கள். இது தொடர்பாக பொதுமக்கள் கூறிய கருத்துகள் இதோ...
நடவடிக்கை தேவை
திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த அச்சுமுருகன்:-
நகரத்தின் மையப்பகுதியில்தான் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. ஆனால் இங்குள்ள பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகிறார்கள். எனவே அனைத்து பஸ்களும், பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடைவீதியில் ஆக்கிரமிப்பு
திருவெண்ணெய்நல்லூர் இளங்கோ:-
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையம் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்துக்கு வரக்கூடிய பஸ்கள் அனைத்தும் வராமல் அணைக்கட்டு சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால் பஸ்கள் இன்றி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. பஸ் நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.