சாலைகள், பொது பாதையில் ஆக்கிரமிப்பை அனுமதிக்க கூடாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சாலைகள் பொது பாதைகளை எதற்காகவும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சாலைகள் பொது பாதைகளை எதற்காகவும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சாலையோர கடை அகற்றம்
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாசாணம், மதுரை ஐகோர்ட்டில் 2017-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சாத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு முன்பு அனுமதி பெற்ற ஆவின் பால் கடை வைத்து ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்து வந்தேன்.
இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை அமைக்கும் போது எனது கடை அகற்றப்பட்டது. திடீரென அந்த கடையை அகற்றியதால் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கடை நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை அமைத்திருந்ததால் சட்டவிதிகளின்படி அந்த கடை அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல் மனுதாரர் ஆக்கிரமித்து கடை நடத்தப்பட்டதாக கூறப்படும் இடத்தில் தற்போது வேறொருவருக்கு கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல என்றார்.
ஆய்வு செய்ய குழு
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இதுபோன்ற பிரச்சினையை சாமானியர்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் சாலை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்க எந்த அனுமதியும் இல்லை. உரிமையும் இல்லை. எனவே மனுதாரருக்கு இந்த கோர்ட்டு எந்த நிவாரணத்தையும் தர முடியாது.
இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து குழு அமைத்து, தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கையை கண்டறிந்து, அதற்கான சட்டங்கள் மற்றும் விதிகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். சாலை ஓரங்களில் கடை நடத்த லைசென்ஸ் வழங்கும்போது பொதுமக்களின் வசதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது
இதற்கான வழிகாட்டுதல்களை மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பொதுப்பாதைகள், சாலைகள், தெருக்கள், பாதைகள், நடைபாதைகள் ஆகியவற்றில் எந்த நோக்கத்திற்காகவும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.