பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்


பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
x

சிவகாசி பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை வருகிற 14-ந்தேதி அகற்ற தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை வருகிற 14-ந்தேதி அகற்ற தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

பொத்துமரத்து ஊருணி

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணியின் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அதனை அகற்ற கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அளவீடப்பட்டது. இதில் 82 கட்டிடங்கள் இருந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 9 கடைகளை மட்டும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

வேறு இடம்

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் நீண்ட நாட்களாக வசித்து வந்த 43 பேருக்கு மட்டும் எம்.புதுப்பட்டி அருகில் நிலம் வழங்க சிவகாசி தாசில்தார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்தார். பின்னர் வேறுஇடம் தேர்வு செய்யப்பட்டு இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் கொடுத்தார்.

அதில் 9 பேர் மட்டும் எம்.புதுப்பட்டி அருகில் கொடுக்கப்பட்ட இடத்திற்கு செல்ல உறுதி அளித்து அதற்கான ஆணைகளை பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பொத்துமரத்து ஊருணியை சுற்றி உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பு பலகைகளை சம்பந்தப்பட்ட பகுதியில் நேற்று வைத்தது.

ஆக்கிரமிப்பு

அந்த அறிவிப்பில் வருகிற 13-ந்தேதி ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், 14-ந் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story