ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்


ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்
x

சிவகாசியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சி கூட்டம்

சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியாகாளிராஜன், கமிஷனர் சங்கரன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் தீர்மானங்களின் மீது கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர்.அதன் விவரம் வருமாறு:-

கவுன்சிலர் ஞானசேகரன்:- சிவகாசி சிவன் கோவில் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த ஒரு வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறேன். ஆனால் அந்த ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படவில்லை.

தனலட்சுமி:- எனது வார்டுபகுதியில் ஓடை ஆக்கிரமிப்பு இருக்கிறது இதனை அகற்ற வேண்டும்.

ரவிசங்கர்:- கே.டி.ஆர். பாலம் அருகில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. அதனை அகற்ற வேண்டும்.

துப்புரவு பணி

குமரி பாஸ்கர்:- துப்புரவு பணி முழுமையாக நடைபெறாத நிலையில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி கடந்த கூட்டத்தில் 26 கவுன்சிலர்கள் மனு கொடுத்தோம். அந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

கமிஷனர் சங்கரன்: தற்போது துப்புரவு பணி முழுமையாக நடைபெறும் வகையில் தினமும் 239 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணி சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

இந்திரா தேவி: சிவகாசி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்படுகிறது. ஆனால் திருத்தங்கல் பகுதி முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது.

முதல்-அமைச்சருக்கு நன்றி

சுதாகரன்:- எனது வார்டு பகுதியில் புதிய கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் கொண்டு வரவில்லை.

ராஜேஷ்:- நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதிய தொகையை உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ம.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

சேதுராமன்:- திருத்தங்கல் பகுதியில் வளர்ச்சி பணிகளை செய்ய தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தின் போது கவுன்சிலர்களுக்கு தொகுப்பூதிய தொகை செக்காக வழங்கப்பட்டது. அதில் சிலரது பெயர்கள் எழுத்து பிழையாக இருந்தது. அதனை அதிகாரிகள் மாற்றி தருவதாக உறுதி அளித்தனர்.


Next Story