ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
அரசகுளம்- திருவிருந்தாள்புரம் கண்மாய்க்கும் இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி,
அரசகுளம்- திருவிருந்தாள்புரம் கண்மாய்க்கும் இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசகுளம் கண்மாய்
காரியாபட்டி அருகே உள்ள அரசகுளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர் அரசகுளம் கண்மாய் பகுதியில் 700 ஏக்கர் பரப்பளவில் நெல், கடலை, மிளகாய், பருத்தி, வெங்காயம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது நிலையூர்- கம்பிக்குடி கால்வாய் திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டதன் காரணமாக அரசகுளம் கண்மாய் 70 ஆண்டுகளுக்கு பிறகு பெருகியது.
ஆக்கிரமிப்பு
இதன் பின்னர் இந்த பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளிலும் தண்ணீர் ஊற்று அதிகரித்தது. தற்போது விவசாயம் சிறப்பாக நடைபெற்று வந்தபோதிலும் அரசகுளம் மற்றும் திருவிருந்தாள்புரம் கண்மாயின் இடையே சில ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றினால் தான் திருவிருந்தாள்புரம் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல ஏதுவாக இருக்கும். இதன்மூலம் இந்த விவசாயிகளின் கிணறுகளில் தண்ணீர் ஊற ஆரம்பிக்கும். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.