ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை


ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
x

ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை

குறைதீர்க்கும் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மனுவை அளித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ராமையா கூறுகையில், ''கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாரில் யூரியா, காம்பளக்ஸ் உரம் தட்டுப்பாடாக உள்ளன. சம்பா நெல் சாகுபடிக்கு உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும். கந்தர்வகோட்டையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைக்க வேண்டும்'' என்றார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மிசா மாரிமுத்து கூறுகையில், ''கந்தர்வகோட்டை அருகே மின்னாத்தூர் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் ஏரி, குளங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை ஆர்.டி.ஓ. தலைமையில் குழு அமைத்து அகற்ற வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிற நிலையில் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்'' என்றார்.

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி பேசுகையில், ''2021-22ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட அளவுக்கு காப்பீட்டின் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீடு கணக்கிடுவதை மறு ஆய்வு செய்ய வேண்டும். விவசாய பணிகளுக்கு போதுமான ஆட்கள் கிடைக்காத நிலையில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் தேவை அதிகரித்துள்ளன. வேளாண் கருவிகள் வாங்க ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்'' என்றார்.

பயிர்காப்பீடு

கல்லணை கால்வாய் பாசனத்தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ரமேஷ் கூறுகையில், ''ஆவுடையார்கோவில் அருகே கீழச்சேரி ஊராட்சி மின்னத்தான்வயல் ஏரிக்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலை அமைத்து ஒரு பாலம் கட்டினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கல்லணை கால்வாய்க்குட்பட்ட பகுதியில் 200 கிராமங்கள் உள்ள நிலையில் 20 கிராமத்திற்கு மட்டும் பயிர்காப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களுக்கும் பயிர்காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் கிடைக்க செய்ய வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசினர். கலெக்டர் பதில் அளிக்கையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story