ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 11 May 2023 4:15 AM IST (Updated: 11 May 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சப்-கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சப்-கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் மரப்பேட்டையில் இருந்து ஊஞ்சவேலாம்பட்டி வரை சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும், தடுப்பு கம்பிகளால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி கடந்த வாரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனு கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் உடுமலை சாலையில் விபத்துகளை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், நேர்முக உதவியாளர் அரசகுமார், தாசில்தார் வைரமுத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட ஆணைய அதிகாரிகள், ஒன்றிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதைத்தொடர்ந்து உடுமலை சாலையில் சப்-கலெக்டர் பிரியங்கா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-

பொள்ளாச்சி-உடுமலை சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை ஒரு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 8 இடங்களில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல பாதை உள்ளது.

இதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, தேவையான இடங்களை தவிர மற்ற இடங்களில் உள்ள பாதையை மூட வேண்டும். விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதோடு, ஒளிரும் விளக்குகளை அமைக்க வேண்டும். தடுப்புகளின் அளவை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story