அரியவகை உயிரினங்கள்... அதிகரித்துவரும் பறவைகள், விலங்குகள் கடத்தல்

வீட்டில் அரிய அலெக்சாண்ட்ரின் கிளிகளை வளர்த்ததுடன், அதுகுறித்து அப்பாவித்தனமாக வீடியோ வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் ரூ.2½ லட்சம் அபராதத்துக்கு உள்ளானார். ஆனால் அவரைப்போல நாடெங்கும் ஏராளமானோர், குற்றம் என்று அறிந்தோ, அறியாமலோ அரிய வகை விலங்குகள், பறவைகளை தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாய் வளர்த்துவருகிறார்கள். அவற்றை வாங்கவும், பராமரிக்கவும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவிடுகிறார்கள் என்பது வெளியே அதிகம் தெரியாத ஆச்சரியம்.
இந்த வித்தியாச விலங்கு நேசர்களை குறிவைத்தே இந்தியாவில் ஒரு கருப்புச்சந்தை கனஜோராக இயங்கிவருகிறது. வெளிநாடுகளில் இருந்து விசித்திர பாம்புகள் முதல் பிரமாண்ட பல்லிகள் வரை ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பனவற்றை சில கும்பல்கள் சர்வசாதாரணமாக தருவித்து விற்பனை செய்துவருகின்றன. அண்மைக்காலமாக விமான நிலையங்களில், கடத்தப்பட்டு வந்த அரியவகை விலங்கினங்கள் பிடிபட்டதாக அடிக்கடி செய்திகள் வெளிவருவது இந்த பின்னணியில்தான். அதிலும் இதுபோன்ற விலங்குகள், பறவைகளின் முக்கிய கடத்தல்வழிகளில் ஒன்றாக சென்னை விமான நிலையம் மாறியிருக்கிறது என்பது அதிர்ச்சி செய்தி. 'இந்த வகை' கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே விமான நிலைய அதிகாரிகள் தனி கூட்டம் போட்டு விவாதித்திருப்பது, நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும். தற்போது, தங்கம், போதைப்பொருள் கடத்தலுடன் போட்டிபோடுகிறது, அரிய உயிரின கடத்தல். ஓராண்டுக்கு உலகளவில் நடக்கும் 'வனவிலங்கு வர்த்தகத்தின்' மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
இப்படி சட்டவிரோதமாக, பலி அபாயத்துடன் கடத்திவரப்படும் அபூர்வ விலங்கு, பறவைகள்தான் பல கைகளை கடந்து வீடுகளை அடைகின்றன. 'பால் பைத்தான்' எனப்படும் ஒருவகை மலைப்பாம்பு முதல், முள்ளெலி, 'மர்மோசெட்' போன்ற குட்டி குரங்கினங்கள், அந்த இனம் மாதிரியான லெமூர், பெரிய சிலந்தி, பேரோந்தி (இகுவானா), பெரும்பல்லி (டெகு) வரை இந்திய இல்லங்களில் செல்லங்களாய் வலம் வருகின்றன. அதிலும் ஆறடி நீளத்துக்கு பிரமாண்டமாய் வளரக்கூடிய பேரோந்திகள், பார்த்தாலே அச்சம் தருபவை. இவை வாலால் ஒரு அடி அடித்தால் நமது எலும்பு முறிந்துவிடும். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிறபோது, முன்பின் பார்த்திராத வகை பாம்பு, காலடியில் நழுவிச் சென்றால், வீட்டுக்கு வரும் விருந்தாளி வெகு இயல்பாகவா இருப்பார்?
செல்லப்பிராணி என்றாலே நாய், பூனையைத் தாண்டி அறியாதவர்களுக்கு இதெல்லாம் அதீத வியப்பை ஏற்படுத்தும். ஆனால் வித்தியாச விலங்கு பிரியர்களோ அவற்றை வளர்ப்பதை ரசித்து, நேசித்து செய்கிறார்கள். அவர்கள் வீட்டினரும் நாளடைவில் அதற்கு பழகிவிடுகிறார்கள் அல்லது 'பழக்கி'விடுகிறார்கள் (மும்பை செம்பூரைச் சேர்ந்த அரிய உயிரின நேசர் ஷெல்டன் டிசவுசா, தனது இதயத்துக்கு நெருக்கமான இகுவானாவா... இதயம் கவர்ந்த காதலியா... என்ற பிரச்சினை வந்தபோது, அவர் 'பை... பை...' சொன்னது, ஐந்தாண்டுகால காதலிக்குத்தான்).
இப்படி முன்பெல்லாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பெரும் பணக்காரர்கள், பிரபலங்களே அரிய விலங்கினங்களை வளர்த்த நிலை மாறி, இன்று சாமானியர்களும் வினோத விலங்குகளை வளர்க்கின்றனர். அபூர்வ உயிரினங்களை பராமரிப்போர் அதுகுறித்து தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிக்கலாம் என்ற ஒருமுறை பொதுமன்னிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு அறிவித்தபோது, 'நாங்கள் வைத்திருக்கிறோம் ஐயா' என்று நாடு முழுவதிலும் இருந்து சொன்னவர்கள் 32 ஆயிரம் பேர்.
இவர்களைப் போன்றோர் இந்தப் பிராணிகளை பிரியப்பட்டுத்தான் வளர்க்கிறார்கள். ஆனால் இவற்றில் பலவும், அழிவின் விளிம்பில் இருப்பவை. வெளித்தெரியாமல் அடைத்தும், திணித்தும் இரக்கமற்ற முறையில் கடத்திவரப்படும் இவை பெரும்பாலும் வரும்வழியிலேயே மடிந்துவிடுகின்றன என்பதுதான் மனதை ரணமாக்கும் சோகம். வெளிநாட்டு வீடுகள், இருப்பிடங்களை அடைந்துவிடும் அரிய உயிரினங்கள் பலவும்கூட, தங்களின் இயற்கைச் சூழல் இழப்பால் நடத்தை, குணாம்சம் மாறி தடுமாறுகின்றன.
அவற்றுக்கு உரிய உணவுகளையும், ஊட்டச்சத்துகளையும் தொடர்ந்து அளிப்பது கஷ்டம். உடல்நலம் பாதிக்கப்பட்டால் சிசிச்சை அளிப்பது அதைவிட சிரமம். (நம் நாட்டில் சாதாரண கால்நடை டாக்டர்களுக்கே பற்றாக்குறை உள்ள நிலையில், வெளிநாட்டு விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.) ஒருவித ஆர்வக்கோளாறில் இவ்விலங்குகளை பெற்றுவிடும் சிலர், நாளடைவில் இவற்றை வைத்து பாதுகாக்க முடியாமல், ஆளைத் தேடி ஒப்படைத்துவிடுகிறார்கள் அல்லது 'அம்போ' என அவற்றின் போக்கில் விட்டுவிடுகிறார்கள். வீட்டுச் சூழலுக்கு பழகிவிட்ட இந்த ஜீவராசிகளை திடீரென வனத்தில் விடுவதும் இவற்றுக்கு ஆபத்துதான்.
ஆனால் ஒருபுறம் இந்த உயிரினங்களுக்கான கிராக்கி வெகுவாக அதிகரித்திருப்பதால், சென்னை, ஐதராபாத், மும்பை, புனே, பெங்களூரு என்று பெருநகரங்களில் இவற்றை விற்கும் நிழல் சந்தைகளும், சட்டவிரோத கடைகளும் பெருகியிருக்கின்றன. ஒரு காலத்தில் அரிய உயிரினங்களின் கடத்தல்வழியாக இருந்த இந்தியா, தற்போது இவை வந்தடையும் இறுதி இடமாக மாறியிருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
பாம்பு, பல்லிகளை எடுத்துச் செல்வது எளிது என்பதால் அவைதான் அதிகம் கடத்தப்படுகின்றனவாம். கடத்தல்காரர்களிடம் இருந்து யாரும் இந்த உயிரினங்களை நேரடியாக வாங்கிவிட முடியாது. அவை பல வட்டங்களை தாண்டித்தான், வளர்ப்போரை வந்தடைகின்றன. இந்த 'தொழிலில்' கணிசமான லாபம் கிடைப்பதால், வாங்கி சிறிதுகாலம் வளர்த்துவிட்டு, பின்னர் அவற்றை நல்ல விலைக்கு விற்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் கல்லூரி மாணவர்களும் உண்டு.
அதிசய விலங்கினங்களை வளர்ப்பவர்கள், விற்பவர்கள், வாங்கி வளர்த்துவிட்டு மீண்டும் விற்பவர்கள் ஆகியோர் அந்த உயிரினங்களுடன் எடுத்த படங்கள், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் கொட்டிக்கிடக்கின்றன.
'நம் நாட்டில் அரிய உயிரினங்களின் கடத்தல், விற்பனையை கட்டுப்படுத்துவதுடன், அதுகுறித்து விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்த வேண்டும். வெளிநாட்டு விலங்குகளை வளர்க்கத் தெரியாமல் வளர்ப்பதும் அவற்றுக்கு இழைக்கப்படும் கொடுமைதான்' என்கிறார்கள் உண்மையான பிராணி நல ஆர்வலர்கள்.
ஆம்... 'சொர்க்கமே என்றாலும்...' பாடல் வரிகள், வெளிநாட்டு வாயில்லா ஜீவன்களுக்கும் பொருந்தும்தானே?
ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை...
இந்தியாவில் அதிக 'டிமாண்ட்' உள்ளதாக கூறப்படும் சில அரிய விலங்கினங்களின் பூர்வீகமும், இங்கு 'விற்கப்படும்' விலையும்...
புலிகளை வளர்த்த மைக் டைசன்
அரச குடும்பத்தினர், அகில உலக வி.ஐ.பி.க்கள் பலரும் வித்தியாச விலங்கு பிரியர்களாகவே இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர். மாவீரர் நெப்போலியனின் மனைவி ஜோசபின், பல வினோத விலங்குகளை அக்கறையாக பராமரித்துவந்தார். அவற்றில், ஒட்டக வகை விலங்கான லாமா, கருப்பு அன்னங்கள், கங்காருகள் உள்ளிட்டவை அடக்கம். கடந்த ஆண்டு மரணம் அடைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், தனது பாசத்துக்குரிய பச்சோந்தி இறந்தபோது இறுதி ஊர்வலம் நடத்தியதாக ஒரு தகவல் உண்டு. அந்த பச்சோந்தி, அவருக்கு இந்தியாவின் கடைசி வைசிராயான மவுன்ட்பேட்டன் பரிசாக கொடுத்தது. பாப் இசைப் புயல் மைக்கேல் ஜாக்சன், பல நேரங்களில் தனது செல்லமான சிம்பன்சி (மனிதக்குரங்கு) 'பபிள்ஸ்' உடன் காட்சி அளித்தார். நட்சத்திர குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ஒருமுறை 3 இந்திய வங்காளப் புலிகளுக்கு சொந்தக்காரராக இருந்தார். இன்னும் பின்னோக்கி வரலாற்று காலத்துக்குப் போனால், மொகலாய பேரரசர் ஜகாங்கீர், இயற்கை, விலங்கு, பறவைகள் மீது பேரன்பு கொண்டிருந்தார். ஜகாங்கீருக்கு கீழ் ஆண்ட பிரபுவான மீர் ஜாபர், ஒருமுறை அவருக்கு ஒரு வரிக்குதிரையை பரிசளித்தார்.
அரிய விலங்குகளுக்கு அம்பானி குடும்பம் 'அடைக்கலம்'
இந்திய பெரும் பணக்காரர்கள் வரிசையில் உள்ள முகேஷ் அம்பானி குடும்பத்தினர், அரிய விலங்குகள் மீது அபரிமித அன்பு கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும்விதமாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 280 ஏக்கரில் பிரமாண்டமாக ஒரு விலங்குகள் மீட்பு மையம் மற்றும் மிருகக்காட்சி சாலையை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள். இங்கு 79 இனங்களைச் சேர்ந்த ஆயிரத்து 689 விலங்குகள் இயற்கைச் சூழலில் உலாவரப் போகின்றன. அவற்றில் 27 விலங்குகள், இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாத அபூர்வ ரகங்கள். ஆப்பிரிக்க சிங்கங்கள் முதல் கொமோடோ டிராகன்கள் எனப்படும் ராட்சத உடும்புகள் வரை இங்கு கண்டுகளிக்க முடியும். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் கனவுத்திட்டமான இது இந்த ஆண்டு திறப்புவிழா காணும்போது, 'உலகிலேயே மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை'யாக இருக்கும் என்று கருதப்படுகிறது.






