பெண்ணாடம் அருகே மணல் குவாரியில் டிரோன் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை


பெண்ணாடம் அருகே      மணல் குவாரியில் டிரோன் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே வெள்ளாறு மணல் குவாரியில் டிரோன் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கடலூர்

பெண்ணாடம்,

மணல் குவாரிகளில் முறைகேடு புகார்

தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறை பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

டிரோன் மூலம் சோதனை

இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்ட எல்லையான பெண்ணாடம் மற்றும் அரியலூர் மாவட்ட எல்லையான சேந்தமங்கலம் வெள்ளாற்றில் செயல்படும் மணல் குவாரியில் சோதனை செய்வதற்காக நேற்று 5 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பெண்ணாடம் அடுத்த எறையூர் ஊராட்சி பகுதிக்கு வந்தனர்.

அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் வந்திருந்தனர். மணல் குவாரியில் முறைகேடு நடந்துள்ளதா?, அரசு அறிவித்ததை விட கூடுதல் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளதா?, உரிய நடைமுறை பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுகிறதா? என்று அமலாக்கத்துறையினர் டிரோன் மூலமும், நவீன கருவி மூலமும் 4 மணி நேரம் சோதனை செய்தனர்.

மேலும் மணல் குவாரி அமைந்துள்ள இடத்தை அளவீடு செய்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story