மணல் குவாரியில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை


அய்யம்பேட்டை அருகே மணல் குவாரியில் மீண்டும் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆற்று தண்ணீரில் இறங்கி ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

அமலாக்கத்துறையினர் சோதனை

தமிழகத்தில் கடந்த மாதம் மணல் குவாரி மற்றும் குவாரிகள் நடத்தி வரும் தொழிலதிபர் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதனால் சில குவாரிகளில் மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் மணல் குவாரிகளில் டிரோனை பறக்க விட்டும், நவீன கருவிகள் கொண்டும் எவ்வளவு ஆழம், அகலத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

குவாரியில் மீண்டும் ஆய்வு

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புத்தூர் கொள்ளிடம் ஆற்றின் மணல் குவாரியில் கடந்த வாரம் 2 நாட்கள் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று காலை திடீரென 3 கார்கள், ஒரு வேனில் துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அய்யம்பேட்டை அருகே உள்ள புத்தூர் மணல் குவாரிக்குட்பட்ட கூடலூர் கிராமத்திற்கு அமலாக்கத்துறை துணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அங்கிருந்து அவர்கள் புத்தூர் முதல் பட்டுக்குடி வரை டிரோனை பறக்க விட்டு ஆய்வு செய்தனர்.

ஆற்று தண்ணீரில் இறங்கிய அதிகாரிகள்

தொடர்ந்து அதிகாரிகள் கிராம மக்களிடம் மணல் எவ்வளவு நாட்களாக அள்ளப்படுகிறது? தினந்தோறும் எத்தனை லாரிகளில் மணல் கொண்டு செல்லப் பட்டது என்பது குறித்தும் கேட்டறிந்தனர். இதையடுத்து அதிகாரிகள் ஆற்றின் தண்ணீரில் இறங்கி எவ்வளவு ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்தனர். மாலை அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பரபரப்பு

அய்யம்பேட்டை பகுதியில் உள்ள மணல் குவாரியில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story