திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை
திருவேங்கடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் ஜீவானந்தம் (வயது 25). இவர் அங்குள்ள ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், திருவேங்கடம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு வருகிற ஆவணி மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் ஜீவானந்தம் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த ஜீவானந்தம் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த நண்பர் உடனடியாக ஜீவானந்தம் வீட்டிற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜீவானந்தம் கிடந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.