தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறிரூ.1½ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
பணம் மோசடி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்வைலாமூரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 35), சரக்கு வாகன டிரைவர். இவரை தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர், தான் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அந்நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி நூதன முறையில் ரூ.30 ஆயிரத்தை பெற்று மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து ஏழுமலை, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், ஏழுமலையிடம் கடன் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தவர், திருவாரூர் மாவட்டம் அழிவளம் பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஸ்டாலின் (34) என்பது தெரிந்தது. இதையடுத்து திருவாரூருக்கு விரைந்து சென்ற விழுப்புரம் போலீசார், அங்கிருந்த ஸ்டாலினை மடக்கிப்பிடித்து விழுப்புரம் அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர், விழுப்புரம் பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரிடம் இதுபோன்று மொத்தம் ரூ.1½ லட்சம் வரை மோசடி செய்திருப்பதும், பி.இ. மெக்கானிக்கல் முடித்துள்ள ஸ்டாலினுக்கு வேலை ஏதும் கிடைக்காததால் ஈரோட்டில் போலி நிதி நிறுவனம் நடத்தி இதுபோன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நூதன முறையில் பேசி ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.