ரூ.7½ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது


ரூ.7½ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
x

அடகு நகையை மீட்க பணம் தேவைப்படுவதாக கூறி கோவையில் 3 பேரிடம் ரூ.7½ லட்சம் பெற்று மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்


அடகு நகையை மீட்க பணம் தேவைப்படுவதாக கூறி கோவையில் 3 பேரிடம் ரூ.7½ லட்சம் பெற்று மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

அடகு நகையை மீட்க பணம்

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). நகை வியாபாரி. இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக்குமார் (38) என்பவர் கடந்த 18-ந் தேதி மோகன்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், நான் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ளேன். அதனை மீட்டெடுப்பதற்கு ரூ.1 லட்சம் குறைவாக உள்ளது. அதனை கொடுத்தால் நகையை மீட்டுவிட்டு, பின்னர் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய மோகன்ராஜ் அசோக்குமாரிடம் ரூ.1 லட்சம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் அசோக்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

ரூ.7½ லட்சம் மோசடி

இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த மோகன்ராஜ் இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அசோக்குமாரை தேடி வந்தனர்.

இதேபோன்று அசோக்குமார் காந்திபுரத்தை சேர்ந்த பழனிவேல் என்ற நகை வியாபாரியிடம் ரூ.3.5 லட்சமும், ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன் (40) என்ற நகை வியாபாரியிடம் ரூ.3 லட்சமும் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடகு நகையை மீட்க பணம் தேவைப்படுவதாக கூறி அசோக்குமார் 3 பேரிடம் மொத்தம் ரூ.7½ லட்சம் பெற்று மோசடி செய்து தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அசோக்குமாரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அவர் இதுபோன்று பலரிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடத்தினர்.

என்ஜினீயர் கைது

இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த அசோக்குமாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் சிவகாசியில் பட்டாசு தொழிற்சலை நடத்தி வந்தார்.

இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், வேலையை இழந்ததாலும் அவர் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இவர் ஏற்கனவே விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story