புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது


புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது
x

புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் விவேக்குமார். இவர், அதே பகுதியில் உள்ள தனது தாயாரின் வீட்டின் 2-வது தளத்தில் உள்ள கட்டிடத்துக்கு புதிதாக கூடுதல் மின் இணைப்பு வேண்டி ஆன்லைனின் விண்ணப்பித்தார்.

இதற்காக அனைத்து ஆவணங்களுடன் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று இளநிலை என்ஜினீயர் கோதண்டராமனை சந்தித்தார். அப்போது அவர், ரூ10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் புதிய மின் இணைப்பு கொடுப்பதாக கூறினார்.

என்ஜினீயர் கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விவேக்குமார், இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். கோதண்டராமனை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை விவேக்குமாரிடம் கொடுத்து, அதனை லஞ்ச பணமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

அதன்படி விவேக்குமாரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கோதண்டராமன் வாங்கியபோது, அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story