சேலத்தில் தங்கும் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து என்ஜினீயர் தற்கொலை-போலீஸ் விசாரணைக்கு பயந்து விபரீதம்
ேசலத்தில் உள்ள தங்கும் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
என்ஜினீயர் தற்கொலை
கரூர் மாவட்டம் புகழூர் அருகே புஞ்சை தோட்டகுறிச்சி அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவ்ஆனந்த் (வயது 29), என்ஜினீயரான இவருக்கும், பிரேமா என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் சேலம் வந்த தேவ்ஆனந்த் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
இரவு சுமார் 9.30 மணி அளவில் அவரது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது குடும்ப பிரச்சினையில் தேவ்ஆனந்த் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விடுதி ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவ்ஆனந்த் பரிதாபமாக இறந்தார்.
குடும்ப பிரச்சினை
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தேவ்ஆனந்த் அவரது மனைவியை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தெரியவந்ததும் கரூர் டவுன் போலீசார் விசாரணைக்காக தேவ் ஆனந்தை அழைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் பயந்த தேவ் ஆனந்த் தங்கும் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.