துணை நடிகர் ஓட்டிய கார் மோதி என்ஜினீயர் பலி; மோட்டார் சைக்கிளில் வழிகாட்டிய நண்பனுக்கு நேர்ந்த சோகம்


துணை நடிகர் ஓட்டிய கார் மோதி என்ஜினீயர் பலி; மோட்டார் சைக்கிளில் வழிகாட்டிய நண்பனுக்கு நேர்ந்த சோகம்
x

விருகம்பாக்கம் அருகே குடிபோதையில் துணை நடிகர் ஓட்டிய கார் மோதி என்ஜினீயர் பலியானார். போதையில் இருந்த துணை நடிகருக்கு மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்று வழிகாட்டிய நண்பனுக்கு நேர்ந்த சோகம்.

சென்னை

சென்னையை அடுத்த மதுரவாயல், தனலட்சுமி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 29). என்ஜினீயரான இவர் சினிமா துறையில் துணை நடிகராகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் கே.கே.நகர், ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக பின்னால் வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே சரண்ராஜ் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திக்கு விரைந்து சரண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (41), என்பதும், இவர் சினிமா துறையில் துணை நடிகராக இருந்து வந்தது தெரிந்தது. மேலும் இறந்து போன சரண்ராஜூம், பழனியப்பனும் சினிமா துறையில் பணியாற்றிய போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர்.

பழனியப்பனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் இரவு நேரத்தில் போதை அதிகமானால் காரை ஓட்டி வருவதற்கு சரண்ராஜை அழைப்பது வழக்கம். நேற்று முன்தினம் பழனியப்பனுக்கு போதை அதிகமானதால் சரண்ராஜை அழைத்துள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சரண்ராஜ் தெரியாத இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு செல்ல முடியாது என்பதால் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று வழிகாட்டினார். அவரை பின்தொடர்ந்து பழனியப்பன் போதையில் காரை ஓட்டி சென்றார். வழியில் கே.கே.நகர், ஆற்காடு சாலையில் வரும்போது முன்னால் சென்ற கார் மீது பழனியப்பன் கார் கட்டுபாட்டை இழந்து மோதி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற சரண்ராஜ் மீதும் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பழனியப்பனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story