மாயமான என்ஜினீயர் கிணற்றில் பிணமாக மீட்பு


மாயமான என்ஜினீயர் கிணற்றில் பிணமாக மீட்பு
x

நாமக்கல்லில் மாயமான என்ஜினீயர் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

கிணற்றில் பிணம்

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை ரெயில் நிலையம் அருகே உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்து கொண்டு இருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடந்த 7-ந் தேதி காணாமல் போன கொசவம்பட்டியில் வசித்து வரும் ஆசிரியர் அசோகனின் மகன் என்ஜினீயர் விக்னேஷ் (வயது24) என்பது தெரியவந்தது. அவர் பிணமாக மிதந்த கிணற்றில் அருகே விக்னேஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்தது.

இது தொடர்பாக அசோகன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மச்சாவு

அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? இல்லை எனில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசி சென்றார்களா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்ஜினீயர் விக்னேஷ் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story