ரூ.30 லட்சத்தை இழந்த என்ஜினீயர்
ரூ.30 லட்சத்தை இழந்த என்ஜினீயர்
கோவை
கோவையில் ஆன்லைனில் வேலை ஆசையில் சிக்கிய என்ஜினீயர் ரூ.30 லட்சத்தை இழந்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயர்
கோவை செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 34). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். என்ஜினீயரிங் கணினி அறிவியல் படித்து உள்ள அவர், பகுதி நேர வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் ராம்குமாரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நல்ல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருக்கிறது, அதில் பணம் செலுத்தும்போது வேலை கொடுப்பார்கள். அந்த வேலையை முடித்து கொடுத்தால் நாம் செலுத்திய பணத்தைவிட 2 மடங்கு கொடுப்பார்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
பணம் கிடைக்கவில்லை
உடனே ராம்குமார், அந்த குறுஞ்செய்தியில் வந்த லிங்குக்கு சென்று பணத்தை செலுத்தினார். அப்போது அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது. அந்த வேலையை செய்து கொடுத்ததால் அவர் செலுத்திய பணத்தைவிட இருமடங்கு பணம் கொடுக்கப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ராம்குமார், தொடர்ந்து பணத்தை செலுத்தி வந்தார். சிறிய தொகையை மட்டுமே முதலில் செலுத்தினார். அதற்கு உடனுக்குடன் பணம் திரும்ப கிடைத்தது. அதன் பின்னர் அவர் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் செலுத்த தொடங்கினார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை.
ரூ.30 லட்சம்
தான் செலுத்திய பணத்தை எப்படியாவது திரும்ப பெற வேண்டும் என்று நினைத்த ராம்குமார், கடந்த 3-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை ரூ.30 லட்சத்து 4 ஆயிரத்து 304 செலுத்தி உள்ளார். அதற்கு அவர்கள் கொடுத்த வேலையை அவர் முடித்தாலும், அதற்கான லாப தொகையை கொடுக்கவில்லை.
உடனே அவா தனக்கு குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் தனக்கு ஆன்லைன் மூலம் வேலை கொடுத்த நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் புகார் செய்தார். ஆனால் எந்த பதிலும் இல்லை.
சைபர் கிரைம் போலீசார் வழக்கு
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராம்குமார், இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையை சேர்ந்த என்ஜினீயர்களிடம் இதுபோன்று தொடர்ந்து மோசடி செய்யப்பட்டு வருவதால் என்ஜினீயர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கோவையில் ஆன்லைன் வேலை ஆசையில் சிக்கி என்ஜினீயர் ரூ.30 லட்சத்தை இழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.