பாபநாசம் அருவி தடாகத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
பாபநாசம் அருவியில் குளித்தபோது என்ஜினீயரிங் மாணவர் தடாகத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அருவியில் குளித்தபோது என்ஜினீயரிங் மாணவர் தடாகத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
என்ஜினீயரிங் மாணவர்
நெல்லை மேலப்பாளையம் அசுரான் கீழ தெருவைச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவருடைய மகன் பெரோஷ்கான் (வயது 19). இவர் நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்காக சென்றார். பெரோஸ்கானுடன் நண்பர்கள் 18 பேர் மோட்டார் சைக்கிள்களில் குளிக்க சென்றனர்.
ஒற்றை அருவி தடாகம்
அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே அகஸ்தியர் அருவியின் வலது புறத்தில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தடை செய்யப்பட்ட ஒற்றை அருவியில் பெரோஷ்கான் உள்ளிட்ட அனைவரும் குளித்தனர். அந்த அருவியின் தடாகத்திலும் குளித்து மகிழ்ந்த அனைவரும் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வனத்துறையினர், இது ஆழம் நிறைந்த ஆபத்தான இடம், இங்கு குளிக்க அனுமதி கிடையாது என்று எச்சரித்தனர். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் புறப்பட தயாரானார்கள். அப்போது பெரோஷ்கான் மாயமானதை அறிந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து பதறினர்.
உடல் மீட்பு
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம், சிறப்பு அலுவலர் அருணாசலம் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று, ஒற்றை அருவி தடாகத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்டநேர தேடுதலுக்கு பின்னர் மாலையில், தடாகத்தில் மூழ்கி இறந்த பெரோஷ்கானின் உடலை மீட்டனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த பெரோஷ்கானின் உடலைப் பார்த்து நண்பர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பாபநாசம் அருவி தடாகத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.